அவுஸ்ரேலிய நிலவு

பல நாட்களாகவே மனம் அழகு! அழகு! என்றே பிதற்றிக்கொண்டுள்ளது. சிறு விடயங்களுக்கும் மனம் கனிந்து நிறைந்து கண் கலங்குகின்றது.

வாழ்வில் நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அந்த உணர்ச்சியை விட்டு விட்டு மனம் அந்தக் கணம் உருவாகி வந்த சரடின் அழகைத்தான் வியக்கிறது. அனைத்தையும் வெளியிலிருந்து பார்க்கும் தர்க்க மனம் என்ன? ஏன்? எவ்வாறு? என வினவுகின்றது.

ஒரு நாள் மாட்டு இறைச்சி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த போது அழகு ரசனை ருசி என தாவிக் கொண்டிருந்த மனம் ஒத்திசைவு என்றதும் என்னை அறியாமலே புன்னகைத்துக்கொண்டு ஆம்! ஆம்! என்றேன்.

நான்கு நாட்களுக்கு முன் இரண்டு வருடங்களுக்குப் பின் தற்செயலாக ஆசான் எழுத்தாளர் ஜெயமோகனின் “மூன்று அறிதல் முறைகள்” உரையை யூடியூப்பில் பார்த்தேன். அதில் அவர் அழகு என்பது ஒத்திசைவு என்று சொன்னார், அப்போது தான் உணர்ந்தேன் இதை இரு வருடங்களுக்கு முன்பு அறிந்ததால் தான் இப்போது அதுவாக ஆகி நிற்கின்றேன் என. தர்க்கத்தால் அறிந்தது உணர்வுகளால் ஆன அழகை எண்ணி வியந்தேன்.

அழகு என்பது இயற்கை, செயற்கை, செயல் என அனைத்திலும் உறையும் இறை அல்லவா!
அதை உணர்வதற்கு அறிதல் அன்றி வேறெது வழி!

சிறு வயதில் பஸ் பிரயாணம் என்றாலே பிடிப்பதில்லை. ஒரு முறை ‘பசங்க’ திரைப்படம் பார்க்கும் போது அதில் ஒரு கட்டத்தில் ஆசிரியர் மாணவர்களிடம் அவர்களுக்குப் பிடித்த விடயத்தைப் பற்றி கேட்கும்போது ஒருவன் தனக்கு பஸ் பிரயாணம்தான் பிடிக்கும் என்று சொல்வான். அதைப் பார்த்தபின், எனக்கும் அது பிடித்திருந்தால் பஸ் பிரயாணத்தை எரிச்சலுடன் கழிக்காமல் சந்தோஷமாக இருந்திருக்கலாம் என தோன்றியது. வயது ஏற ஏற எனக்கும் பஸ் பிரயாணம் பிடித்துப் போய்விட்டது. பின்னர் தான் புரிந்து கொண்டேன் போக வேண்டிய இடத்தின் மீது இருந்த ஆர்வம் பிரயாணத்தை அனுபவிக்க விடவில்லை என. ஆனாலும் அந்தக் கேள்வி என்னுள் அப்படியே இருந்தது.

சிறு வயதிலிருந்தே சாப்பிடும் போது கறியில் இருக்கும் வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் என அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வெறும் கறியுடன் சோற்றைக் குழைத்து சாப்பிடுவேன். பின்னர் எப்போது நான் சமைத்து சாப்பிட ஆரம்பித்தேனோ அன்றிலிருந்து அனைத்தையும் குழைத்து சாப்பிட ஆரம்பித்தேன். சமையல் அறிதல் அதிகரிக்க ருசிகளை அனுபவிக்க ஆரம்பித்தேன். பசிக்கு ருசி தெரியாது என்று சொல்லுவார்கள், ஆனால் என் அனுபவம் கற்றுத்தந்தது பசி இல்லாமல் ருசிக்க முடியாது.

இரு வருடங்களுக்கு முன் நண்பர்களும் எழுத்தாளர்களுமான கிரிசாந், யதார்த்தன் மூலம் வெண்முரசு ஊடாக தீவிர இலக்கியம் அறிமுகமானது. ஆரம்பத்தில் எனக்கு கவிதை வாசிக்கத் தெரியாது காரணம், தமிழிலே பிறந்து வளர்ந்தாலும் நான் மொழியை இரசிக்க தெரிந்தது இருக்கவில்லை என்று நினைக்கிறேன். வெண்முரசு தொகுதி வாசித்து முடித்த பின் அதன் மெய்யறிதல் ஒருபுறம் இருக்க அதன் மொழி என்னைப் பற்றிக்கொண்டு விட்டது. இப்போது தான் தமிழ் மொழியின் அழகில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். இலக்கியத்தை அறிய ஆரம்பித்தது முதல் என் உணரிகள் அனைத்தையும் வேகமாகக் கூர் கொள்ள ஆரம்பித்து விட்டது.

நான் உணர்கிறேன், அறிதலே அழகை உணர்வதற்கான முதல் படி, சிந்திய நீர்த்துளிகள் இணைந்து இணைந்து சரடாகி ஓடுவது போல ஏதோ ஒரு கணத்தில் அறிந்த விடயங்கள் இணைந்து இணைந்து நாம் ஆகுகின்றோம்.

வெண்முரசில் ‘இமைக்கணத்தில்’ ஒரு வரி உண்டு, “தொழில் கூர் கொள்ளும் போது கலை ஆகும், கலை கூர் கொள்ளும் போது வேதமாகும்”.

அனைத்து தொழில்களுக்கும் ஒவ்வொரு இறை உண்டு, எம்மை அதற்கு ஒப்புக் கொடுக்கும் போது தெய்வம் எம்மீது இறங்கி செயலைக் கலையாக்கும், அது தரும் ஆத்தல் வேறெதுவும் தராது. ஒரு கட்டத்தில் கலை வேதமாகி உலகியலைப் போதிக்கும்.

திருமண வாழ்வை தொடர்வதற்காக இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியா வந்து ஒரு வருடமும் சில மாதங்களும் ஆகிறது. வந்து சில மாதங்களிலேயே வாழ்க்கையில் பல மாற்றங்கள் மனமுடைவுகள் போராட்டங்கள். வாழ்வு அவுஸ்ரேலிய நிலவு போல தலைகீழாக மாறினாலும் அதன் அழகு மாறவில்லை.

பகிர்க